பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டிய மர்ம நபரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் மர்ம நபர்கள் சாலையோரம் தேவையற்ற குப்பைகள்இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை அடிக்கடி கொட்டி வந்துள்ளனர். இந்நிலை தொடர்வதால் அப்பகுதி மக்களிடையே நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் வண்டியில் இருந்து குப்பையை கொட்டிய மர்ம நபரை பொதுமக்கள் சிறை பிடித்துள்ளனர்.
அதன்பிறகு அப்பகுதி மக்கள் ரெட்டியார்சத்திரம் கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் லிங்குசாமி ஆகியோருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் அந்த ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பிறகு அதிகாரிகள் குப்பை கொட்டிய வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.