விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என்றும், அத்துடன் புகார் எண்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுக திமுக, பாமக அமமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அத்துடன் பேனர் வைத்தால் புகார்களை தெரிவிக்க 9445190205, 945190698, 9445194802 என்ற தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. முன்னதாக பேனர்கள் வைக்கப்பட்டால் பேனர் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.