உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைதல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை மக்கள்தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளது. அதில், உத்திரப் பிரதேசத்தில் இரு குழந்தை கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிட முடியாது. அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதில் இருந்தும் அல்லது எந்த ஒரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் நான்கு பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும். அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு குழந்தை விதிகளைப் பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு குழந்தை விதிகளைப் பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு முழு சேவையின் போது இரண்டு கூடுதல் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். மகப்பேறு அல்லது விடுப்பு 12 மாதங்கள், முழு சம்பளம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதலாளியின் பங்களிப்பு நிதியில் 3 சதவீதம் அதிகரிக்கும். ஒரே குழந்தையுடன் நிறுத்தி கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் என வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.