செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா தொற்றின் 2-ம் அலை காரணமாக மன்னை எக்ஸ்பிரஸ் மற்றும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை தென்னக ரயில்வே வெளியிடவில்லை. மன்னார்குடி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் பணிபுரிந்து வருபவர்கள் தன் சொந்த ஊருக்கு சென்று வருவதற்கு மிகவும் பயனுள்ளதாக செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இருந்து வந்தது.
ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு மீண்டும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் இயங்க தொடங்கி இருப்பதனால் சொந்த ஊருக்கு வந்த பணியாளர்கள், தொழிலாளர்கள் மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். எனவே இந்த வேளையில் செம்மொழி எக்ஸ்பிரஸ் மீண்டும் இயங்கினால் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆகவே மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.