ரயில்வே மேம்பால பணியை மீண்டும் தொடங்குவது குறித்து சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் – சத்திரப்பட்டி ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கினால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேம்பால பணியை மீண்டும் தொடங்குவது குறித்து எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் அவர்கள் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லிங்குசாமி, தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து ரயில்வே மேம்பால பணி நடைபெற உள்ளதால் போக்குவரத்தை சரி செய்வது குறித்து அந்த துறை சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இந்த மேம்பாலம் அமைக்கும் பணியை 4 மாதங்களில் முடிக்க எம்.எல்.ஏ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உதவி கோட்ட பொறியாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.