தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கூலித்தொழிலாளி பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பள்ளபாளையம் பகுதியில் வசந்த், முருகன் என்ற இரண்டு கஞ்சா வியாபாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இந்நிலையில் வசந்தனின் அண்ணனான பேச்சிமுத்து என்ற கூலித் தொழிலாளி தனது தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு அரிவாளுடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றித்திரிந்துள்ளார்.
இதனை அடுத்து வசந்தனின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சரவணன் என்பவரது வீட்டிற்கு சென்ற பேச்சிமுத்து அவரது தாயாரான ஜெயந்தியை அரிவாளால் வெட்டியுள்ளார். அதன் பின் ஜெயந்தியின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வருவதற்குள் பேச்சிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேச்சிமுத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.