ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மீனவரை மர்மநபர்கள் சிலர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூர் கிராமத்தில் முருகன்(45) அவரது மனைவி வேளாங்கண்ணி, மகன் கேசவன், மகள் விஷ்ணுபிரியா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகன் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் தற்போது திணைக்குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் தொழிலுக்கு சென்று விட்டு நரிப்பையூரில் உள்ள வீட்டில் இரவு துங்கியுள்ளார்.
அப்போது இரவு வீட்டிற்கு நுழைந்த மர்மநபர்கள் சிலர் முருகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து முருகன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாயல்குடி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.