மனைவி இறந்த துக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் குமார் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி குமாரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் குமார் சரியாக வேலைக்கு செல்லாமலும், யாரிடமும் பேசாமலும் இருந்துள்ளார். இதனையடுத்து வாழ்க்கையை வெறுத்த குமார் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் மாட்டுக் கொட்டகையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அதன் பின் குமாரின் தந்தையான வெங்கடேசன் தனது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.