ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரிகள் சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி, பர்லியார் ஆகிய தோட்டக்கலை பண்ணைகளில் துரியன், மங்குஸ்தான் போன்ற ஏராளமான பழ மரங்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும் ஒப்பந்த அடிப்படையில் இந்த மரத்தில் விளையும் பழங்களை அறுவடை செய்ய ஏலம் விடப்படுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல ஏலம் விடப்பட்ட போது மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வியாபாரிகளும், உள்ளூர் வியாபாரிகளும் அதில் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் ஒரு தரப்பினர் ஏலத்தை முடிவு செய்ததால் மற்றொரு தரப்பினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கோபமடைந்த வியாபாரிகள் ஒருவரை ஒருவர் தாக்கி மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மோதிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஏலம் விடப்பட்டுள்ளது.