ராஜக்கல் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுவழி அமைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றது. இதனையடுத்து சம்பத்நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மாநகராட்சியை 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் தலைமையில், ஊழியர்கள் மோட்டார் மூலம் தெருவில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று மாங்காய்மண்டி, கிரீன்சர்க்கிள் பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்ததனால் அதையும் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் கனமழை காரணமாக வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர பள்ளங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதனால் பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்துவரும் தெருக்களில் சேரும் சகதியுமாக காட்சியளித்து பொதுமக்கள் தெருக்களில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்பின் பத்தலபல்லி மலட்டாற்றிலுள்ள தமிழக வனப்பகுதியான ராயலுகுண்டிற்கு ஆந்திர, கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாததனால் ஓரளவிற்கு தான் தண்ணீர் வந்தது. ஆனால் வேலூர் மாவட்டம் எல்லையான அழிஞ்சிகுப்பம்- ராஜக்கல் பாலாற்றில் தரைப்பாலத்தில் இருபுற கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இவ்வாறு ராஜக்கல் பாலாற்றில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தரைப்பாலம் வழியாக ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டிற்கு பொதுமக்கள் யாரும் பாலாற்றை கடந்து செல்லாதவாறு மேல்பட்டி காவல்துறையினர் இரும்பு தடுப்பு வேலிகளை வைத்து போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் மாற்று பாதையான நரியம்பட்டு வழியாக பேருந்துகள் மற்றும் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.