சட்டவிரோதமாக சாராய கிடங்கு மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட வடகாடு காவல்துறையினர் சேதுராமனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் புதரின் அருகில் 300 லிட்டர் சாராயக் கிடங்கு இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அந்த சாராயகிடங்கை காவல்துறையினர் மணலை போட்டு மூடி அழித்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மணமேல்குடி பகுதியில் தங்கவேல்,முத்துக்குமார் ஆகியோரை சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்கவேல்,முத்துகுமார் ஆகியோரிடம் இருந்த 104 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.