தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று எழுந்திருக்கும் விஷம குரல்களை மத்திய, மாநில அரசுகள் தொடக்கத்திலேயே அடக்க வேண்டும். மக்களிடம் இருந்தும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத நிலையில் சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிக்காக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. சாதியை முன்வைத்து தமிழ்நாட்டை இரண்டாக கூறு போட்டால் அது தமிழகத்திற்கு பெரும் வெட்க கேடாக முடிந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.