வீட்டில் அடிக்கடி தகராறு செய்த மகனை தந்தை கடப்பாரையால் அடித்து கொலை செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அண்ணாநகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சின்ராசு என்ற ராஜா கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ராஜா தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகின்றது. இந்நிலையில் இரவு 9 மணிக்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்து ராஜா தகராறில் ஈடுபட்டதனால் கோபமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து அவர் தலையில் தாக்கியுள்ளார். இதனால் ராஜா மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரனை உடையார்பாளையம் கடை வீதியில் வைத்து காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்ததோடு விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் அவரை ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் சுப்பிரமணி வழக்கு குறித்து விசாரித்து ராஜேந்திரனை 15-நாள் சிறையில் வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ராஜேந்திரன் ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.