பிளீச்சிங் பவுடரை சாப்பிட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் கே.சி.ரோடு பகுதியில் கூலி தொழிலாளியான சீதாராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீதாராஜின் இரண்டாவது மகளான இசக்கியம்மாள் என்ற சிறுமி பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு இருந்த ப்ளீச்சிங் பவுடரை தெரியாமல் சாப்பிட்டு விட்டார். இதனால் இசக்கியம்மாள் வயிற்று வலியால் மிகவும் துடி துடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் சிறுமியின் தந்தையான சீதா ராஜிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைக் கேட்ட அதிர்ச்சி அடைந்தசீதாராஜ் உடனடியாக அங்குச் சென்று தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு இசக்கியம்மாளுக்கு மருத்துவர்கள் இணைந்து தீவிர சிகிச்சை அளித்து அந்த சிறுமியை காப்பாற்றி விட்டனர். இந்நிலையில் இசக்கியம்மாளின் சிகிச்சை முடிந்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு இசக்கியம்மாள் எதுவும் சாப்பிட முடியாமலும், நாளுக்கு நாள் மெலிந்தும்,மூச்சு விடமுடியாமல் தினமும் அவதிப் பட்டு இருந்துள்ளார். இதனையடுத்து சீதா ராஜ் மீண்டும் மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்றபோது அங்கு இசக்கியம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டதால் எதுவும் சாப்பிட முடியாமலும், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர்.
இதனை குணப்படுத்த வேண்டும் என்றால் அதிக செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சீதா ராஜ் மருத்துவர்களிடம் நான் கூலி வேலை செய்வதால் போதிய அளவு வருமானமும் ,வசதியும் இல்லை என மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த தலைமை அரசு மருத்துவர் அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் என்பவர் சிறுமியான இசக்கியம்மாளின் மருத்துவ ரிப்போர்ட்களை பரிசோதித்த பிறகு அவரை மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.