போலி டாக்டர் அளித்த சிகிச்சையால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டி.எம்.ஜி. நகரில் வசிக்கும் டாக்டர் மணிகண்டனிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று ஆறுமுகத்திற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வழக்கம் போல் டாக்டர் மணிகண்டனிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது டாக்டர் மணிகண்டன் ஆறுமுகத்திற்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு ஆறுமுகம் சிகிச்சைப் பெற்று திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அவர் வாயிலிருந்து ரத்தம் வெளியேறி மயங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து ஆறுமுகத்தின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் ஆம்புலன்சில் ஆறுமுகத்தை ஏற்றிக்கொண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் டாக்டர் மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் எம்.பி.பி.எஸ். படிப்பு படிக்காமல் ஒரு தனி அறையில் வைத்து நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போலி டாக்டரான மணிகண்டனை கைது செய்ததோடு அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த அறைக்கு சீல் வைத்துள்ளனர்.