காலாவதியான மருந்தை உடலில் செலுத்தியதால் முன்னாள் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்து நகர் பகுதியில் தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அவரது குடும்பத்தினர் ராமதாசை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து ராமதாசுக்கு செவிலியர்கள் குளுக்கோஸ் மருந்து பாட்டிலை ஏற்றினார்கள். அப்போது அவரது மகனான வெங்கடேஷ் எதார்த்தமாக குளுக்கோஸ் பாட்டிலை பார்த்தபோது காலாவதியான மருந்து என்பதை தெரிந்து கொண்டார். இதுகுறித்து உடனடியாக வெங்கடேஷ் செவிலியர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் இதனால் ஒரு பாதிப்பும் இல்லை என கூறிவிட்டனர்.
இதனையடுத்து வெங்கடேஷ் இதைப்பற்றி மருத்துவக் கல்வி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ராமதாஸ் உயிர் பயம் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு சிறிது நாட்கள் கழித்து ராமதாஸ் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் ராமதாசுக்கு காலாவதியான மருந்தை ஏற்றி உடல் அளவில் துன்புறுத்தலை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வெங்கடேஷ் தனது தாயாருடன் சென்று மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.