மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் போதைப் பொருட்கள் கடத்தும் நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் – செட்டிபாளையம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும்போது காவல்துறையினரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றுள்ளார்.
அதன்பிறகு காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 80 ஆயிரம் ரூபாய் பணமும், 2 கிலோ கஞ்சாவும் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள சோசோ பகுதியில் வசிக்கும் கிரிதரிமாஜி என்பதும் தற்போது அவிநாசி குருந்தன்காடு பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வாலிபர் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து இங்கு விற்பனை செய்வதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் அந்த நபரை அவிநாசி பகுதியில் இருக்கும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது அவர் வீட்டில் 16 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வடமாநில வாலிபரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த 18 கிலோ கஞ்சா, 80,000 ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.