தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது தளர்வுகளுடன் ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை. தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு நூற்றுக்கணக்கில் மரணங்களும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஓராண்டிற்குப் பிறகு சென்னையில் முதன் முறையாக கொரோனா காரணமாக நேற்று ஒரு மரணமும் ஏற்பட வில்லை. நேற்று சென்னை உட்பட 20 மாவட்டங்களில் கொரோனா காரணமாக மரணம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மக்கள் மத்தியில் நிம்மதி தரும் செய்தியாக அமைந்துள்ளது.