மர்மமான முறையில் இறந்த அரசு ஊழியரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரவி பல மணி நேரமாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி ரவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சுமதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரவியை தீவிரமாக தேடிவந்துள்ளனர்.இதனையடுத்து ரவி திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு பின்புறம் இருக்கும் முந்திரி தோப்பில் தூக்கில் தொங்கியவாறு மர்மமான முறையில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேற யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.