அரசியல் கட்சி பிரமுகரின் கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் 7 நபர்களை கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியில் ரஜினி பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வளரும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ரஜினி பாண்டியனை கடந்த 9-ஆம் தேதி இரவு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொலை குறித்து எடையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், மகாதேவன், பிரதீப், சம்பத், கார்த்திகேயன், சிதம்பரம், ஆனந்த் ஆகிய 7 பேரை கொலை வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் ஆனந்த் தவிர மற்ற 6 பேரையும் தஞ்சை வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் கொலை வழக்கு குறித்து ஆனந்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே விசாரணையின் முடிவில் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.