கொரோனா விதிமுறைகளை மறந்து மீன் சந்தையில் அதிகப்படியான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் பகுதியில் இருக்கும் மீன் சந்தை கொரோனா தொற்று காரணமாக பல நாட்களாக திறக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திறக்கப்பட்ட கீழவாசல் மீன் சந்தையில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கீழவாசல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பொதுமக்களிடம் முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுரை கூறியுள்ளனர்.