ராணுவ அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இருங்களூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், விஷால் மற்றும் ரித்யான் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர். தற்போது சங்கர் மேற்கு வங்காள மாநிலத்தில் ஜே.சி.ஓ ராணுவ அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிக்கிம் – லாச்சுங் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் சக அதிகாரிகள் சங்கரை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சங்கரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சங்கரின் மனைவியான ஜெகதீஸ்வரிக்கு இது குறித்து சக அதிகாரிகள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து சங்கரின் உடலுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்திய பின்பு அவரின் சொந்த ஊருக்கு உடல் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பின்பு சங்கரின் உடலானது ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.