மராட்டிய மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் இந்த ஆண்டு பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கு பல மாநிலங்களில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இதேபோன்று மராட்டிய மாநிலத்தில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில பள்ளிக்கல்வித் துறை மந்திரி தெரிவித்துள்ளதாவது: “தற்போது நிலவும் சூழ்நிலையின் காரணமாக கல்வியை கலவையாக கையாள வேண்டும்.
கொரோனா இல்லாத கிராமங்களில் பாதுகாப்பான முறையில் பள்ளிகளை திறக்கலாம். முதல்கட்டமாக ஒரு மாதத்திற்கு மேலாக பாதிப்பு இல்லாத கிராமங்களில் பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிகள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15-ஆம் தேதி முதல் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.