வெடி பொருள் வெடித்து சிதறியதால் பெண்ணின் கால் சிதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவியான வசந்தி என்ற பெண் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வெடிபொருள் வெடித்துள்ளது. இதனால் வசந்தியின் காலில் படுகாயம் ஏற்பட்டு அவர் வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார்.
இந்த சத்தத்தை கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த வசந்தியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிறுகனூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லாரியில் ஏற்றி செல்லும் போது அதிலிருந்து கல்குவாரியில் பயன்படுத்தும் வெடிபொருள் தவறிக் கீழே விழுந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அந்த வெடிபொருளை வசந்தி மிதித்ததால் அது வெடித்து சிதறியிருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பாடாலூர்-புள்ளம்பாடி சாலையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கல்குவாரிகளை மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.