வயலில் தனியாக நின்ற பெண்ணிடம் வாலிபர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாடி கிராமத்தில் ரமேஷின் மனைவி சுதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது நிலப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சேனைக்கிழங்கிற்கு களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சுதாவின் வாயில் துணியை வைத்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் சுதா மர்ம நபரை தடுக்க முயன்ற போது அவரை தாக்கி அருகில் உள்ள ஓடையில் தள்ளிவிட்டார்.
இதனையடுத்து சுதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபரை துரத்தி கையும் களவுமாக பிடித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கடலூர் மாவட்டத்திலுள்ள மங்களூர் வண்ணார தெருவில் வசித்து வரும் சின்னையன் என்பதும் சின்னசேலம் அருகிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோது வயலில் சுதா தனியாக நின்றதை பார்த்து தங்கச்சங்கிலியை பறித்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சின்னையனை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்து 2 பவுன் தங்க சங்கிலியை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.