பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வலையங்குளம் பகுதியில் முத்துமுனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொத்து தகராறில் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக முத்துமுனியாண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இதனையடுத்து முத்துமுனியாண்டி ஜாமினில் வெளிவந்தார். அவர் வெளியே வந்து சில நாட்களில் மர்ம நபர்கள் முத்துமுனியாண்டியை வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெருங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துமுனியாண்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் முத்துமுனியாண்டிக்கும் அதே பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இதனால் இளைஞர்கள் முன்விரோதத்தை மனதில் வைத்து முத்துமுனியாண்டியை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துமுனியாண்டியை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் இளைஞர்களான லட்சுமணன், சிவா, முத்துக்குமார், வைரமுத்து, பொன்முருகன், வினோத், கருப்பசாமி ஆகிய 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.