31 வயதான இளம்பெண் ஒருவர் தனது கையில் குழந்தை கொண்டு ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் காமன்பூரில் உள்ள ஜூலப்பள்ளியைச் சேர்ந்த அருணா என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் என்பவருடன் திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பிரவீன் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார். சில ஆண்டுகளாக இவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காததால், இரண்டு ஆண்டுகளாக கூடுதல் வரதட்சணை வாங்கி தருமாறு அருணாவையும் குழந்தைகளையும் அவர் துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரவீனுக்கு எதிராக அருணாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ராமகுண்டம் ரயில் நிலையத்தில் தனது 2 குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் அவரது இரண்டு குழந்தைகளும் பாதையின் அருகே படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு குழந்தை கோதாவரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.