விளையாடச் சென்ற சிறுவன் கடலுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதவன் காலனி பகுதியில் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 4 வயதுடைய மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவனான மாதவன் தனது பெற்றோரிடம் வீட்டு பக்கத்தில் விளையாடி விட்டு வருவதாக கூறி சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் தனது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் சிறுவனான மாதவன் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு சங்குகுளி பகுதியில் அமைந்துள்ள கடற்கரை ஓரத்தில் ஒரு சிறுவனின் சடலம் ஒதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் மாதவனின் பெற்றோர் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது சிறுவனின் தாய் உடலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அலறி சத்தம் போட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தவறி கடலுக்குள் விழுந்தால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.