முன்விரோதம் காரணமாக பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாரங்குளம் நாடார் பகுதியில் கூலித் தொழிலாளியான கார்மேகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரெஜினா மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு புனிதா என்ற மகள் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புனிதாவை விருது நகரில் வசிக்கும் சக்திவேல் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் புனிதா தினமும் தனது பெற்றோருக்கு போன் செய்து பேசுவது வழக்கம். அதன்படி புனிதா தனது பெற்றோருக்கு போன் செய்து நீண்ட நேரமாகியும் அவர்கள் எடுக்கவில்லை.
இந்நிலையில் புனிதா தனது பெற்றோரை பார்ப்பதற்காக அங்கு சென்றபோது அவரின் தாயாரான ரெஜினா மேரி அடித்து கொலை செய்த நிலையிலும், தனது தந்தையான கார்மேகம் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த புனிதா அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பலத்த காயம் அடைந்த கார்மேகத்தை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளித்து வருகின்றனர். அதன்பிறகு காவல்துறையினர் ரெஜினா மேரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் கார்மேகத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் கருப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சினையால் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோபமடைந்த கருப்புசாமி, கார்மேகத்தின் வீட்டிற்கு சென்றபோது கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த ரெஜினா மேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கம்பியால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.