விமானத்திற்குள் இளைஞர்கள் சிலர் முகக் கவசம் அணிய மறுத்தால் விமானம் ரத்தான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்கா நாட்டில் பாஸ்டன் நகரில் இருந்து பாகமாஸ் மாகாணத்திற்கு செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற தொடங்கியுள்ளனர். அப்போது இளைஞர்கள் குழுவாக விமானத்துக்குள் ஏறும்போது முகக் கவசம் அணியாமல் இருந்தனர். இதனால் விமானத்தில் இருந்த பணிப்பெண் அவர்களை முக கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த இளைஞர்கள் இதை கண்டுகொள்ளாமல் இருந்தனர் . இதையடுத்து ஊழியர்கள் தங்கள் விமான நிறுவனத்தின் விதிமுறையின்படி பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அந்த இளைஞர்கள் முகக்கவசம் அணியவதற்கு மறுத்துள்ளனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அந்த விமானம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து உடனடியாக வேறொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மற்ற பயணிகளை அந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். ஆனால் முகக்கவசம் அணிய மறுத்த அந்த இளைஞர்களுக்கு மறுநாள் தான் விமானம் இருக்கின்றது என்று அவர்கள் கூறினர். மேலும் அந்த இளைஞர்களை ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் குழுவின் பலருக்கும் 17 வயது உடையவர்களாக இருந்ததால் ஹோட்டல் விதிமுறையின்படி அவர்களுக்கு தங்க இடம் கொடுக்கவில்லை. இதனால் இளைஞர்கள் பலர் விமான நிலையத்திலேயே தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்பிறகு மறுநாள் வேறொரு விமானத்தில் இளைஞர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் . இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.