குடும்ப பிரச்சினையில் தாய் தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செக்கடியூர் பகுதியில் கூலி தொழிலாளியான சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கனகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனு என்ற மகனும், இலக்கியா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கனகா கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனையடுத்து சரவணன் அங்கு சென்று சமாதானம் பேசி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்து சென்றபோது மீண்டும் சரவணனுக்கும், கனகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கனகா மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் கனகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெய் எடுத்து தனது இரண்டு குழந்தைகள் மற்றும் அவரின் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சரவணன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் உடல் முழுவதும் கருகிய நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கனகா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.