கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதையில் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக வேலூர் கோட்டை கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அடைக்கப்பட்டது. இதனால் கோட்டை வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், அருங்காட்சியகங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து காந்தி சிலை அருகில் இரும்பு தடுப்புகள் அமைத்து காவல்துறையினர், தொல்லியல் துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 6-ம் தேதி முதல் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதைக்கு செல்லும் இரும்பு கேட் அடைக்கப்பட்டு இருந்ததால் சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதையில் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நடைப்பாதையில் வளர்ந்திருந்த செடி கொடிகளை தொல்லியல்துறை ஊழியர்கள் அகற்றினர். அதன்பின் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் நடை பாதையில் சென்று அகழி மற்றும் கோட்டையின் கட்டிட அமைப்புகளை கண்டு மகிழ்ந்தனர்.