அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் மதிமுக 23 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் உற்சாகமாக நடைபெற்றது . மதிமுக சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதிமுக நிறைவேற்றிய தீர்மானகள் :
திராவிட இயக்கத்திற்கு எழுந்திருக்கும் அறைகூவலை முறியடிக்கவும், தமிழர் உரிமைகளை காக்கவும் அண்ணாவின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.
திராவிட இயக்கத்தின் நிறுவன தலைவர்களான டாக்டர் நடேசனார் , சர்.பிட்டி தியாகராயர் , டி.எம். நாயர் ஆகியோருக்கு தாயகத்தில் சிலை நிலவ சிலை நிறுவப்படும்.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை 38 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும்,23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்கள் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம்.
இந்து ராஷ்டிரிய கருத்துக்களை முறியடிக்க திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவுடன் அரசியல் முன்னெடுப்புகளை வைகோ மேற்கொள்ள வேண்டும்.
காஷ்மீர் பிரச்சினையில் பாஜக மேற்கொண்ட வரலாற்றுப்பிழையை சரிசெய்து அம்மாநில தனித் தன்மையை நிலைநாட்ட வேண்டும்.
புதிய கல்வி கொள்கை 2019 வரைவு அறிக்கையை மத்திய பாஜக அரசு கைவிடவேண்டும் .
இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த சிறந்த பொருளாதார அறிஞர்களிடம் குழு ஒன்றை அமைத்து அவர்களின் பரிந்துரையை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
அயல்நாட்டு முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் வகுப்பினருக்கு அளிக்கப்பட்டும் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு செயல்படுத்தக் கூடாது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஹைட்ரோகார்பன் , மீத்தேன் திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டும் , காவிரி பாசனப் பகுதிகளைப் பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
தேனி மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி செயல்படுத்த முயற்சிக்கும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும்.
மீனவர் மீட்பு மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும் , மீன்கள் சந்தைப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்.
கூடங்குளத்தில் அணு அளவு சேமிப்பு அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் , அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
தமிழர்களின் உணர்வுகளை மதித்து பேரறிவாளன் , சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்திட வேண்டும்.
சீர்கேடு கிடக்கும் தமிழக நிதிநிலை சீர் படுத்த அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் மூடி முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
நூற்பு ஆலைகள் நலிவடைவதை தடுத்து தொழிலாளர்கள் வேலை இழப்பை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மத்திய மாநில அரசுப் பணிகளில் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களை மட்டுமே தேர்வு செய்யும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த உலகத் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.
பல தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட்டு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.