கல்குவாரி செயல்பட அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம் நடுமண்டலம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போரட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். பின்பு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை கலெக்டரிடம் மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்நிலையில் பொதுமக்கள் அந்த மனுவில் எங்கள் கிராமத்தில் கல்குவாரி செயல்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கல்குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்திய பிறகு சில நாட்கள் அது செயல்படாமல் இருந்துள்ளது.
ஆனால் தற்போது மீண்டும் கல்குவாரி செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதால் கல்குவாரியை முழுமையாக மூடும் படி கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குடகனாறு அணையை குத்தகைக்கு விட்டு மீன் வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வேடசந்தூர் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் குடகனாறு அணையில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் முழுவதும் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தண்ணீரே இல்லாத அந்த அணையை மீன் வளர்ப்பதற்காக குத்தகைக்கு விடப் போவதாக தெரியவந்தது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.