நிலத் தகராறில் விவசாயி உட்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் விவசாயியான ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து 2 1/2 ஏக்கர் நிலத்தை ராஜ் தனக்கு சொந்தமாக வாங்கியுள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் அன்னையப்பா என்பவர் அந்த நிலத்தின் மீது உரிமை கோரியதால் ராஜ் மற்றும் அன்னையப்பா தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த அன்னையப்பா தரப்பினர் ராஜ் மற்றும் அவரது உறவினரான சசிதரன் என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அன்னையப்பா, அவரது மனைவி லட்சுமி, உறவினர் சுரேஷ்பாபு ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.