“ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல; பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுக்கு எதிராக, பாஜகவின் கரு நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் “ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல; பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது. இது மாநில அரசின் கொள்கை முடிவு என குறிப்பிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.