இந்தியாவிலிருந்து துபாய்க்கு வருகிற 21 ஆம் தேதி வரை விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
துபாய் நாட்டிலுள்ள எமிரேட்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக கடந்த மாதம் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலீட்டு விசா, கோல்டன் விசா, பங்குதாரர் விசா மற்றும் மருத்துவ பணியாளர்கள் வருவதற்கும், தனியார் ஜெட் விமானங்களில் வருவதற்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து துபாய்க்கு செல்பவர்கள் அர்மீனியா, மாலத்தீவு ஆகிய நாடுகளில் தங்களை 14 நாட்களுக்கு தனிமைபடுத்திக் கொண்டு வருகின்றனர்.
மேலும் விடுமுறை மற்றும் வேறு சில காரணத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜூன் 15 லிருந்து பயணச்சீட்டு முன்பதிவு வசதி தொடங்கியது. ஆனால் தற்போது இந்த விமான சேவை இரத்தானது தொடரும் எனக் கூறியுள்ளதால் முன்பதிவு செய்தவர்கள் தங்களது பயண தேதியை மாற்றிக் கொள்ள முன்பதிவு மையங்களை அணுகுங்கள் என்றும் பயணத்தின் போது தங்களது பயணச்சீட்டு வைத்திருந்தால் போதுமானது எனவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிருந்தும் வருகிற 21 ஆம் தேதி வரை விமான சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.