2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகளை இப்போதே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றிய தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோர், தற்போது அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். இந்த நிலையில், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளுடன் பிரஷாந்த் கிஷோர் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்.இதனிடையே, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் பி.கே.வின் ஐபேக் டீம் ஒப்பந்தம் போடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பின்னணியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரஷாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.