டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஆட்டோ டிரைவரான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாக்யராஜும், அவரது நண்பர் பிரதீப் என்பவரும் ஜமுனா நகர் பகுதியில் இருக்கும் ஏரிக்கரையோரம் அமர்ந்து பேசி உள்ளனர். இதனையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திருமுல்லைவாயல் போலீஸ் ஏட்டு சந்தோஷ் என்பவர் நண்பர்கள் இருவரிடமும் எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்று விசாரித்து அவர்களின் செல்போன்களை வாங்கி விட்டார்.
அதன் பிறகு போலீஸ் ஏட்டு சந்தோஷ் தனது செல்போனில் இருவரையும் புகைப்படமெடுத்து விசாரணைக்கு ஆட்டோவுடன் இருவரும் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அப்போது எந்த தவறும் செய்யாத நாங்கள் எதற்கு காவல் நிலையம் வர வேண்டும் என்று பாக்யராஜ் கூறியதால் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சந்தோஷ் பாக்யராஜின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து பாக்யராஜ் அங்கு கிடந்த பீர் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் செல்போனை திரும்ப தரவில்லை என்றால் எனது கழுத்தை அறுத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு சற்றும் எதிர்பாராத சமயத்தில் பாக்யராஜ் பீர் பாட்டிலால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு பிரதீப் பாக்யராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாக்யராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருமுல்லைவாயல் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.