ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் சடலம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரிலிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ரயிலானது மாலை 6 மணி அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு வந்துள்ளது. அப்போது இரண்டு கால்களும் இல்லாமல் உடல் சிதைந்த நிலையில் வாலிபரின் சடலம் ரயில் என்ஜினில் சிக்கி கொண்டிருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கண்டிகுப்பம் காலனியில் வசித்த பரதன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பரதன் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது ரயில் மோதி பலியானதும், அதனை அறியாமல் என்ஜின் டிரைவர் சுமார் 27 கிலோ மீட்டர் தூரம் ரயிலை இயக்கியதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.