ஆதார் கார்டு திருத்தம் செய்யும் மையத்தில் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஆதார் கார்டு திருத்தம் செய்யும் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு தினமும் ஆதார் கார்டு திருத்தம் செய்வதற்காக பல்வேறு பொது மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆதார் மையத்தில் குறைந்தளவே பணியாளர்கள் இருப்பதால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்கின்றனர். மேலும் இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ஆதார் கார்டில் இருக்கும் தவறுகளை பணியாளர்கள் சரி செய்து வழங்க முடியவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது ஆதார் மையத்தில் ஆதார் கார்டு திருத்தம் செய்வதற்கான பணியை ஒரே ஒரு நபர் மட்டும் மேற்கொள்வதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் பணியாளர்களை ஆதார் மையத்தில் அமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும் இணையதள வசதியை அதிகப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.