”நன்றி மறந்தவன் தமிழன்” என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ”நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன், பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் தான் என்று அன்று பேசியதை தமிழர்கள் யாரும் கொண்டாடவில்லை” அதனை கொண்டாடியிருக்க வேண்டும் என்று கோபத்துடன் தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார். இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும் புதிய கல்விக்கொள்கை மற்றும் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளிடம் கேட்பதை விட விட மாணவர்களிடம் கேட்டால் இதற்கான பதில் கிடைத்துவிடும் என்றும், பொது தேர்வு பயத்தால் பலர் பாதியில் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.