அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் இருக்கும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிகாகோவில் கொரோனாவால் அடைக்கப்பட்டிருந்த பள்ளிகளை அடுத்த மாதத்திலிருந்து திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் தெர்மாமீட்டர்கள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது.
மேலும் கடந்த வருடத்தில் சிகாகோ பள்ளி கல்வித்துறையால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் கற்கும் மாணவர்களுக்கு ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது.
இது பாலியல் கல்வியினுடைய ஒரு பகுதியாக கருதப்படுகிறது. மேலும் எச்ஐவி தொற்று, பாலியல் சம்பந்தமான நோய்கள் பரவுதல், எதிர்பாராமல் நிகழும் கர்ப்பம் போன்றவற்றை தடுக்க என்று கூறப்பட்டது. சிகாகோவின் பொது சுகாதாரத்துறை தான் ஆணுறைகளை அளிக்கிறது. இதற்கு மாணவர்களின் பெற்றோரும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது, பாலியல் கல்வி என்பது வரவேற்க கூடியது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுவர்களுக்கு எதற்காக ஆணுறைகள் என்பது தான் கேள்வி. ஐந்தாம் வகுப்பு கற்கும் சிறுவர்களுக்கு பத்து அல்லது பதினோரு வயது தான் இருக்கும்.
அவர்களுக்கு இது எதற்காக? இதனால் நீங்கள் என்ன கற்றுக்கொடுக்க விரும்புகிறீர்கள்? இவ்வாறு ஆணுறை வழங்குவது கேலிக்குரியது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இன்னும் சிலர், வளர் இளம் பருவத்தினருக்கு முறையான கல்வி, ஆலோசனைகள் தேவை. எனவே இந்த அறிவிப்பு வரவேற்கக்கூடியது என்கிறார்கள்.