மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 7மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்வா சிட்டி பகுதியில் மனநலம் பாதித்த பேச்சித்தாய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சித்தாய்க்கும் நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் நம்பிராஜன் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர் மும்பையில் ஹோட்டல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இதனால் நம்பிராஜன் திருமணமானவுடன் தனது மனைவியான பேச்சுத்தாயை மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு பேச்சுத்தாய் கர்ப்பமாக இருந்ததால் அவரை பிரசவத்துக்காக நம்பிராஜன் தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து பேச்சு தாய்க்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு சுபாஷ் பிரபாகர் என்று பெயரிட்டுள்ளனர். இதனையடுத்து பேச்சுத் தாயின் பெற்றோர் அவரை கணவர் இருக்கும் மும்பைக்கு அனுப்ப நினைத்த போது அவரின் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் இன்னும் சிறிது காலம் இங்கேயே தங்கட்டும் என்று இருக்க வைத்துள்ளனர். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பேச்சு தாய் 7 மாதக் குழந்தையுடன் வெளியே சென்று அப்பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் திடீரென குதித்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்துள்ளார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள்அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றுக்குள் குதித்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பேச்சுத் தாய் மற்றும் 7மாத குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். அங்கு பேச்சு தாய்க்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று குழந்தையான சுபாஷ் பிரபாகரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.