கோவிலுக்கு செல்லும் பாதையில் சுற்றித்திரிந்த ஒற்றை தந்தம் யானையை வன அதிகாரிகள் காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான மலைப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றில் மேல் அரசம்பட்டு காடு மற்றும் கருத்தமலை காப்புக்காட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10-க்கும் மேல் உள்ள யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து யானைகளை விரட்டினர். இந்நிலையில் ஒற்றைத் தந்த யானை ஒன்று தனியாக மலைப்பகுதியில் சுற்றி வருகின்றது. இந்த யானையானது குருவராஜபாளைய காப்புக்காட்டில் உள்ள தர்மராஜா கோவிலுக்குச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது பக்தர்கள் அதை கண்டதும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்த யானையை விரட்டினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியபோது ஒற்றை தந்தம் கொண்ட யானை சுமார் 40 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் காப்பு காட்டிலும், குருவராஜபாளையம் காப்பு காட்டிலும் சுற்றித்திரிந்து வருகின்றது. இந்த ஒற்றைத் தந்த யானையினால் விவசாயிகள், பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் மாம்பழ சீசனில் குருவராஜபாளையம் காப்பு காட்டிலும், பலாப்பழம் காலத்தில் ஜமுனாமுத்தூர் காப்பு காட்டிலும் வாழ்ந்து வருகின்றது. எனவே தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி இருப்பதால் இந்த யானை குருவராஜபலயம் காப்பு காட்டில் இருந்து வெளியேற அந்த வழியாக சென்றுள்ளது. இதனால் அந்த யானை ஜமுனாமுத்தூர் காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது என்று வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.