ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பகல் நேரத்தில் காட்டு யானை ஒன்று மூச்சிகண்டி கிராமத்திற்குள் நுழைந்து விட்டது. மேலும் இந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியை சுற்றி வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அச்சத்தில் இருந்துள்ளனர். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இது குறித்து கிராம மக்கள் கூறும் போது ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவ மாணவிகள் பகல் நேரங்களில் சிக்னல் பிரச்சனையால் திறந்த வெளியில் சுற்றி வருகின்றனர். இவ்வாறு ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே காட்டு யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.