மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் புதிய முயற்சியாக இ-பீட் ரோந்து பணியை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி போலீஸ் விழுதுகள் என்னும் குழு அமைக்கப்பட்டு, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த குழு மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களின் விவரங்களை கண்டெடுத்து உள்ளனர். இந்த மாவட்டத்தில் 72 ஆண்கள், 198 பெண்கள் என 270 மூத்த குடிமக்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதில் போலீஸ் உட்கோட்ட அளவில் திருவாரூரில் 53 நபரும், நன்னிலத்தில் 44 நபர்களும், மன்னார்குடியில் 102 நபர்களும், திருத்துறைப்பூண்டியில் 38 நபர்களும், முத்துப்பேட்டையில் 33 நபர்களும் இருக்கின்றனர். எனவே அனைத்து மூத்த குடி மக்களின் வீடுகளுக்குச் சென்று சோதனை செய்து பாதிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இ-பீட் ரோந்து முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருவாரூர் நகர் மேல சீதன கட்டளை பகுதியில் வாழ்ந்து வரும் மூத்த குடிமக்கள் கிருஷ்ணம்மாள், ஜெகதாம்பாள் போன்றோர் வீடுகளில் கியூ ஆர் கோடு ஒட்டி இ-பீட் ரோந்து முறை திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, இந்த மாவட்டத்தில் தனியாக வசிக்கும் மூத்த குடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இ-பீட் ரோந்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கும் க்யூ.ஆர் குறியீடு உருவாக்கப்பட்டு அந்த வீடுகளில் ஒட்டப்பட்டு, அவற்றை போலீஸ் அலுவலர்கள் வருகையின்போது ஸ்கேன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இதனால் மூத்த குடி மக்களின் வீடுகளை போலீஸ் அலுவலர்கள் சரியான நேரத்தில் சோதனை செய்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. மேலும் இ-பீட் ரோந்து முறை திட்டத்தை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மாவட்டத்தில் 270 இடங்களில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.