திருப்பத்தூரில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று பொதுமக்கள் பயன் அடைய கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், கந்திலி, பேரணாம்பட்டு ஆகிய வட்டாரங்களில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள், 59 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 3 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 2 மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், 2 கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் 19 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றது.
இந்தக் கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த வட்டியில், திருப்பி செலுத்தும் வகையில் பயிர்கடன், விவசாய நகை கடன், பொது நகை கடன், கறவை மாட்டுக் கடன், சுய உதவி குழுக்கள் கடன், தனிநபர் கடன், சிறு வணிக கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், வேலை செய்யும் மகளிருக்கான கடன், தானிய ஈட்டுக் கடன், பண்ணை சாராக் கடன், வீட்டுக் கடன், வீட்டு அடமானக் கடன், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள கடன், தொழில் முனைவோர் கடன், தாட்கோ கடன், கல்விக் கடன் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே தற்போது கொரோனா தொற்று கால கட்டத்தில் வேலை இன்றி தவிக்கும் பட்டதாரி இளைஞர்கள், கைவினை இளைஞர்கள், சாலையோர மற்றும் நடைபாதை சிறு, குறு வியாபாரிகள், பொதுமக்கள், சிறு வணிகர்கள் போன்றோருக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடன்கள் வழங்கபடுகிறது. மேலும் கடன்களை திருப்பி செலுத்தும் கடன்தாரர்களுக்கு வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே கந்து வட்டியில் சிக்கித் தவிக்காமல் மேற்கண்ட கடன்களுக்காக தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தேவையான கடன் உதவியை பெற்று பொதுமக்கள் பயன் அடைய வேண்டும் என்ற தகவலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.