இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில்வே மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் சில பேர் இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி முறைகேடாக முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 5 நாட்களில் மாவட்டம் முழுவதிலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. சர்ச் அருகில் ஒரு டிராவல்ஸ் ஏஜென்சியில் முறைகேடாக ரயில்வே டிக்கெட் விற்கப்படுவதாக ரயில்வே மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பின் போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில், ரயில்வே காவல்துறையினர் அந்த கடையில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த 2 கணினிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் இணையதளத்தில் 6 போலி இரயில்வே கணக்குகள் தொடங்கி அதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஏஜென்சியின் உரிமையாளரான திக்கணங்கோடு புதூர் பகுதியில் வசித்து வரும் சுஜின் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 63 ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த டிக்கெட்டுகளின் மதிப்பு சுமார் 1 1/2 லட்சம் ரூபாய் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.