Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவியின் விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள  கொங்கரப்பட்டு கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி மாலை மாணவி ரம்யா திடீரென காணாமல் போய் விட்டார். இதுகுறித்து பச்சையப்பன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது மகளை 17 வயது சிறுவன் கடத்தி சென்றுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது விவசாய கிணற்றில் ரம்யா சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அங்கு விரைந்து சென்றனர். அதன்பின் அவர்கள் மாணவியை வாலிபர்கள் சில பேர் கொலை செய்து கிணற்றில் போட்டதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் மாணவி இறந்தது குறித்து 7 வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க கொங்கரப்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு இருந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து மாணவியை கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர்கள் சக்தி, தங்க குருநாதன், கலைச்செல்வி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் யாரேனும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் மாணவியின் சடலத்தை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தனர். இந்நிலையில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி அந்த கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் 17 வயதுடைய சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |